அஸ்ஸலாமு அழைக்கும் - அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக

திங்கள், 4 ஜனவரி, 2010

அந்த ஏழு நபர்கள்...

அல்லாஹ்வின் நிழலைத்தவிர வேறு எந்த நிழலுமே இல்லாத நாளில் அல்லாஹ் ஏழு கூட்டத்தாருக்கு மட்டும் அர்ஷின் நிழலில் நிழல் கொடுப்பான்.
  1. நீதியான அரசன்,
  2. அல்லாஹ்வின் வணக்கத்தில் திளைத்த (ஊரி திளைத்த) வாலிபன், 
  3. பள்ளியோடு உள்ளம் தொடர்புள்ள மனிதன்,
  4. இருவர் அல்லாஹ்விற்காக நேசித்து ஒன்றிணைந்து அல்லாஹ்விற்காகவே பிரிந்தவர்கள்,
  5. நல்ல குடும்பத்தைச் சேர்ந்த ஒரு அழகி ஒருவரை விபச்சாரத்திற்காக அழைத்தும் நான் அல்லாஹ்வை பயப்படுகின்றேன் என்று கூறிய(ஒதுங்கிக் கொண்ட)வர்,
  6. வலது கரம் கொடுக்கும் தர்மத்தை இடது கரத்திற்கு தெரியாமல் மறைமுகமாக தர்மம் கொடுத்தவர்,
  7. தனிமையில் இருந்து அல்லாஹ்வை நினைத்து (அழுது) கண்களால் கண்ணீர் வடித்தவர் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
1. நீதியான அரசன்:
அல்லாஹ் திருமறையில் இவ்வாறு கூறுகின்றான்:
நம்பி உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதங்களை அவற்றின் சொந்தக்காரர்களிடம் நீங்கள் ஒப்புவித்து விடவேண்டுமென்றும், மனிதர்களிடையே தீர்ப்பு கூறினால் நியாயமாகவே தீர்ப்புக் கூறுதல் வேண்டும் என்றும் உங்களுக்கு நிச்சயமாக அல்லாஹ் கட்டளையிடுகிறான்;. நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு (இதில்) மிகவும் சிறந்த உபதேசம் செய்கிறான்;. நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கின்றான். 4:58.

2. அல்லாஹ்வின் வணக்கவழிபாட்டில் உருவான வாலிபன்
வாலிப வயது என்பது, மனிதன் தன் வாழ்வில் பெறும் மிக முக்கிய கட்டமாகும். அந்த வயதில் மனிதன் சகல உடல் ஆரோக்கியத்தையும் பெற்று கம்பீரமாக வாழும் வயதாகும். அந்த வயதில்தான் மனிதனின் உடல் நல்ல ஆரோக்கியத்தை பெற்று சுறுசுறுப்பாக வாழும் வயதாகும். எதையும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உருவாகும் வயதாகும். அதுவும் இந்த காலத்தைப்பற்றி கூறத்தேவையில்லை. இப்படிப்பட்ட பல எண்ணங்கள் உருவாகும் வயதிலும் அல்லாஹ்வைக்கு அடிபணிந்து நடக்கும் வாலிபனும் அந்த அர்ஷின் நிழலில் வீற்றிருப்பான். தங்களின் ஈமானை பாதுகாத்துக் கொள்வதற்காக குகைக்கு சென்ற வாலிபர்களை பற்றி அல்லாஹ் திருமறையில் புகழ்ந்து கூறுகின்றான்.

3. பள்ளியோடு நெருங்கிய தொடர்புடைய மனிதர்
பள்ளிக்குள் இருப்பதில் அமைதி பெறுபவர் ஒரு உண்மையான முஃமின். மனிதன் என்பவன் உலகத்தேவைகள் உள்ளவன், அவனுக்கு குடும்பம் என்றும் தொழில் என்றும் பல உலகத்தேவைகள் இருக்கின்றது. பள்ளிக்குள்ளேயே தனது வாழ்நாளை கழிக்கமுடியாது என்பதால், பள்ளிக்குள் வந்த அந்த மனிதன் தனது உலக வாழ்க்கைத் தேவைக்காக வெளியில் செல்லத்தான் வேண்டும். பள்ளியிலிருந்து வெளியில் சென்றதும் மீண்டும் பள்ளிக்குள் வந்து அந்த ஈமானிய அமைதியை எப்போது பெறுவதென்றே எண்ணிக் கொண்டிருப்பார். தண்ணீரிலிருந்து எடுக்கப்பட்ட மீன் மீண்டும் தண்ணீருக்குள் செல்வதற்கு துடிப்பது போல், பள்ளியிலிருந்து உலகத் தேவைக்காக வெளியில் சென்ற முஃமின் மீண்டும் பள்ளிக்குள் வருவதற்கு ஆசைப்படுவான். இது ஒரு உண்மையான முஃமினைத்தவிர வேறு யாரிடமும் இருக்க முடியாது.

4.இருவர் அல்லாஹ்விற்காகவே நேசித்து ஒன்று சேர்ந்து, அல்லாஹ்விற்காகவே பிரிந்தவர்கள்
இன்று மனிதர்களில் அதிகமானவர்கள் ஒருவரை நேசிப்பதும் கோபிப்பதும் உலகத்தை மையமாக வைத்தே. ஒருவரால் ஏதும் கிடைக்குமென்றிருந்தால் அவருடன் நேசிப்பார்கள், அது கிடைக்கவில்லையெனில் அந்த நேசத்தை முடித்துக் கொள்வார்கள். ஆனால் ஒரு முஃமின் அப்படி இருக்கமாட்டார். அவர் ஒருவரை நேசிப்பதும் கோபிப்பதும் அல்லாஹ்விற்காகவே இருக்கும். ஒரு மனிதன் மார்க்கத்தை பின்பற்றி நடக்கின்றார் என்பதை பார்க்கும் போது அவரை நிச்சயமாக ஒரு முஃமின் நேசிப்பான், அவர் இவருடைய சொந்தக்காரராக இருந்தாலும் சரி, அல்லது சொந்தம் இல்லாதவராக இருந்தாலும் சரியே, அதே நேரத்தில் அவரிடத்தில் இஸ்லாத்திற்கு மாற்றமான பண்புகளை பார்க்கும் போது அவரை வெறுக்கவும் செய்வார் இதுவே ஒரு உண்மையான முஃமினின் பண்பாகும். யார் அல்லாஹ்விற்காக நேசித்தும் கோபித்தும் இன்னும் அல்லாஹ்விற்காக கொடுக்கவும் தடுக்கவும் செய்கின்றாரோ அவர் ஈமானை முழுமையாக்கிக் கொண்டார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூதாவூத்)

5.நல்ல குடும்பத்தைச் சேர்ந்த ஒரு அழகி ஒருவரை விபச்சாரத்திற்காக அழைத்தும் நான் அல்லாஹ்வை பயப்படுகின்றேன் என்று கூறியவர் (ஒதுங்கிக் கொண்டவர்)
காளி இயாள் (ரஹ்) அவர்கள், இந்த ஹதீதிற்கு விளக்கம் அளிக்கும் போது, எந்த ஒரு ஆணும் அழகுள்ள நல்ல குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்ய விரும்புவார்கள், அது இயற்கையும் கூட, அப்படிப்பட்ட பெண்களை அடைவதற்கு பல சிரமங்களை மேற்கொள்ள வேண்டிவரும். ஆனால் எந்த ஒரு சிரமமுமின்றி அப்படிப்பட்ட பெண்ணே அழைக்கும் போது, அவளிடமிருந்து ஒதுங்கிக் கொள்பவரும் அந்த ஏழு கூட்டத்தில் அடங்குவார்.

6.வலது கரம் கொடுக்கும் தர்மத்தை இடது கரத்திற்கு தெரியாமல் மறைமுகமாக தர்மம் கொடுத்தவர்
இடது கை கொடுக்கும் தர்மத்தை வலது கை தெரியாமல் கொடுப்பதென்பதின் கருத்து, உள்ளத் தூய்மையுடன் தர்மத்தை கொடுப்பதென்பதாகும். மறைமுகமாக செய்யும் தர்மம் இறைவனின் கோபத்தை அணைத்துவிடும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஃஜமுஸ்ஸகீர், தப்ரானி)
இங்கு தர்மத்தை குறிப்பாக சொல்லப்பட்டிருந்தாலும் எல்லா அமல்களையும் உள்ளத் தூய்மையுடன் செய்யவேண்டும் என்பதை இது குறிக்கின்றது. அமல்களை குறைவாக செய்தாலும் அல்லாஹ்விற்காக செய்ய வேண்டும். அதுவே அல்லாஹ்விடத்தில் ஏற்றுக் கொள்ளப்படும்.

7. தனிமையில் இருந்து அல்லாஹ்வை நினைத்து (அழுது) கண்களால் கண்ணீர் வடித்தவர்
ஆதமுடைய மக்கள் அனைவரும் தவறு செய்பவர்கள், தவறு செய்தவர்களில் சிறந்தவர்கள் பாவமன்னிப்பு தேடுபவர்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஃஜமுஸ்ஸகீர், தப்ரானி) பாவமன்னிப்பு ஏற்றுக்கொள்ளப்படுவதற்குரிய நிபந்தனைகளில் ஒன்று, தான் செய்த பாவத்தை நினைத்து கவலைப்பட்டு அதற்காக கண்ணீர் வடிப்பது. அல்லாஹ் நம் அனைவருக்கும் அதற்கு வாய்ப்பளிப்பானாக!

குறிப்பு: நட்புடன் கருத்துரைத்தைக் கருத்தில் கொண்டு இங்கு அவசியமில்லாத சில விளக்கங்கள் நீக்கப்பட்டுள்ளது.

இஸ்லாம் கல்வியிலிருந்து...

5 கருத்துகள்:

  1. நல்லதொரு இடுக்கை.

    ரொம்ப பெருசாக இருந்தால் படிக்க சோம்பல் வரும்

    இதனையே பிரித்து பிரித்து போடலாம்.

    பதிலளிநீக்கு
  2. உங்கள் கருத்துக்கு நன்றி. இன்ஷால்லாஹ் இனிமேல் பதியும்போது சுருக்கமாக படிக்க இலகுவானதாக பதிய முயற்சிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  3. அருமையான இடுகை முகைதீன் அப்துல் காதர். நல்ல பகிர்வு.

    பதிலளிநீக்கு
  4. நினைவூட்டலுக்கு நன்றி, நல்ல பகிர்வு MAK.

    பதிலளிநீக்கு
  5. உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் ரொம்ப தேங்க்ஸ்

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்து