அஸ்ஸலாமு அழைக்கும் - அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக

புதன், 28 அக்டோபர், 2009

ஹஜ்ஜுடைய காலம்

بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحيمْ
الْحَجُّ أَشْهُرٌ مَّعْلُومَاتٌ فَمَن فَرَضَ فِيهِنَّ الْحَجَّ فَلاَ رَفَثَ وَلاَ فُسُوقَ وَلاَ جِدَالَ فِي الْحَجِّ وَمَا تَفْعَلُواْ مِنْ خَيْرٍ يَعْلَمْهُ اللّهُ وَتَزَوَّدُواْ فَإِنَّ خَيْرَ الزَّادِ التَّقْوَى وَاتَّقُونِ يَا أُوْلِي الأَلْبَابِ 197

ஹஜ் (ஜூக்குரிய காலம்! தெரிந்த மாதங்களாகும் அம்மாதங்களில் ஹஜ்iஐ (தன்மீது) விதியாக்கிக் கொண்டவர் ஹஜ்ஜின் போது உடலுறவு கொள்வதோ, குற்றம் செய்வதோ, விதண்டாவாதம் புரிவதோ கூடாது. நீங்கள் எந்த நன்மையைச் செய்தாலும் அல்லாஹ் அறிகிறான். (ஹஜ்ஜூக்குத்) தேவையானவற்றை திரட்டிக் கொள்ளுங்கள் ! திரட்டிக் கொள்ள வேண்டியவற்றில் (இறை) அச்சமே மிகச் சிறந்தது அறிவுடையோரே! என்னை அஞ்சுங்கள். 2:197

اَلسَّلاَمُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَة
ஹஜ்ஜூடைய மாதத்தில் இருந்து கொண்டிருக்கிறோம் இஸ்லாமிய ஐம்பெரும் கடமைகளில் ஹஜ்ஜூடைய கடமையை இறைவன் இறுதி கடமையாக்கினான். காரணம் அதற்கு முந்தைய கடமைகளாகிய கலிமா, தொழுகை, நோன்பு, ஜகாத், போன்றவைகளை முறைப்படுத்தி செய்து விட்டு இறுதியாக அதுவும் வசதியும், உடல் ஆரோக்கியமும் பெற்றிருந்தால் ஹஜ் என்ற இறுதி கடமையை செய்து இறை திருப்தியை அடைந்து கொள்ள இறைவன் உத்தரவிட்டான். வசதியும், ஆரோக்கியமும் இருந்து ஒருவர் ஹஜ் செய்ய மறுத்தால் மட்டுமே அதனால் அல்லாஹ்வுக்கு யாதொரு நஷ்டமும் இல்லை என்றும் கூறினான் இறுதி கடமையாகிய ஹஜ்ஜை செய்யச் செல்வோர் அதற்கு முந்தைய கலிமா, தொழுகை, நோன்பு, ஜகாத், போன்ற கடமைகளை அழகுறச் செய்து இறுதியாக ஹஜ்ஜை செய்தால் இஸ்லாமிய ஐம்பெரும் கடமைகளை இனிதே நிறைவேற்றி இறை திருப்தியை அடைந்து கொள்ளலாம். அதுவே இறைவனிடம் ஒப்புக் கொள்ளப்பட்ட ஹஜ் என்ற அந்தஸ்தை அடையும்.
இறுதி வடிவம் பெறும் எந்த ஒன்றும் ஒழுங்குடன் அமைய வேண்டுமெனில் அதற்கு முந்தையதை சீராக அமைத்திடல் வேண்டும் இல்லை என்றால் அது இறுதி வடிவம் கிடைக்காது என்பதுடன் அது விழலுக்கு இரைத்த நீர் போல் ஆகும். ஒரு கட்டிடத்தை எடுத்துக் கொள்வோம் கட்டிடத்திற்கு இறுதி வடிவம் கிடைப்பதற்கு கட்டிடம் எழுப்பப்படவிருக்கின்ற தரையின் ஈரத் தன்மைக்கு தகுந்தாற்போல் அஸ்த்திவாரமிட்டு அதன் மேல் தூண்கள் நிருவப் பட்டப் பின்னர் கற்களை சீராக அமைத்தால் கட்டிடம் அழுகுடனும், அழுத்தத்துடனும் இறுதி வடிவம் பெறும்.இஸ்லாம் என்ற கட்டிடம் ஐந்து தூண்களின் மேல் (கலிமா, தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ்) நிலை பெற்றிருப்பதாக பெருமானார்(ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு உமர்(ரலி) அவர்கள் கூறுகின்றார்கள். ஆதாரம் புகாரி, முஸ்லீம். இதில் கலிமா, தொழுகை, நோன்பு, ஜகாத், போன்ற தூண்களை அகற்றி விட்டு அல்லது அவற்றை சீரில்லாமல் ஏற்றத் தாழ்வுடன் அமைத்து விட்டு ஹஜ் என்ற தூணை மட்டும் முறையாக நிருவினால் அதன் நிலமை என்னவாக இருக்கும்? அல்லாஹ்வும், அல்லாஹ்வுடைய தூதரும் ஐம்பெரும் தூண்களைக் கொண்டு நிருவிக் கொடுத்த அழகிய கட்டிடத்தை முஸ்லிம் சமுதாயத்தினரே சிதைக்க முயலளாமா? சிந்திப்போம் சீர்பெறுவோம். இஸ்லாத்தின் இறுதிக் கடமையை நிறைவேற்றச் செல்ல விரும்பும் சகோதரர்களே! அதற்கு முந்தைய நான்கு கடமைகளை முழுமைப் படுத்தி விட்டீர்களா? கலிமா இலகுவாக சொல்லி இருப்போம் கலிமாவுடைய பொருளணர்ந்து அதில் நிலைத்திருந்தோமா? என்று ஒரு முறை தங்களைத் தாங்களேக் கேட்டுக் கொள்ளுங்கள். தொழுகை என்ற இறை வழிப்பாட்டை அல்லாஹ்வும், அல்லாஹ்வுடைய தூதரும் காட்டித் தந்த வழியில் நடைமுறைப் படுத்தினீர்களா? என்பதை ஒரு முறை தங்களைத் தாங்களேக் கேட்டுக் கொள்ளுங்கள். தொழுகை எவரிடத்தில் இருக்குமோ அவரே வெற்றிப் பேற்றோர் என்று இறைவன் தன் திருமறையில் கூறுகிறான் நம்பிக்கை கொண்டோர் வெற்றி பெற்று விட்டனர். (அவர்கள்) தமது தொழுகையில் பணிவைப் பேணுவார்கள். 23:1,2

எங்கே வெற்றிப் பெறுவோம் ?
மறு உலகில் ! மறுமை நாளின் போது அடியானின் செயல்களில் முதலாவதாக கணக்கு கேட்கப்படுவது அவரது தொழுகைப் பற்றியே, அது முறையாக இருந்தால் அவர் வெற்றிப் பெற்று கரை சேர்ந்து விடுவார், அது சீர் கெட்டிருந்தால் நஷ்டமும் கைசேதமும் உடையவராக ஆகி விடுகின்றார். என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவரகள் கூறியதாக அபூஹூரைரா(ரலி)அவர்கள் அறிவிக்கின்றார்கள் நூல்: திர்மிதி, இப்னுமாஜா.
தொழுகை என்ற இறைவனுக்கு தூய்மையான சிந்தனையுடன் செலுத்துகின்ற வழிப்பாடின் மீது கவனம் செலுத்தாமல் விட்டு விட்டால் அது சீர்கெட்டு அதனால் மறுமையில் வெற்றிப் பெற முடியாமல் போவதுடன் அதற்கடுத்த நிலையில் வரும் அனைத்து வழிப்பாடுகளும் அதே நிலையில் சீர்கெட்டு தோல்வியைத் தழுவும் என்பதை மேற்கானும் நபிமொழி மூலம் தெரிந்து கொள்ளலாம். மேலும் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் ஒருநாள் தொழுகையைக் குறித்து உரை நிகழ்த்தினார்கள் அப்போது பின்வருமாறு கூறினார்கள்: எவர் தம் தொழுகைகளைச் சரியான முறையில் பேணி வருகின்றாரோ அவருக்கு - அவரது தொழுகை இறுதித் தீர்ப்புநாளில் ஒளியாகவும் ஆதாரமாகவும் அமையும். ஈடேற்றத்திற்கு காரணமாக அமையும். எவர் தமது தொழுகைகளைப் பேணவில்லையோ அவருக்கு அத்தொழுகை ஒளியாகவும் அமையாது, ஆதாரமாகவும் ஆகாது, அதனால் ஈடேற்றம் பெற முடியாது. (முஸ்னத் அஹமத், இப்னுஹிப்பான்) அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் (ரலி) அவர்கள். தொழுகை என்ற இறைவனுக்கு செலுத்துகின்ற வழிப்பாடு அறவே பேணப்படாமல் இருந்தால் அல்லது அது முறையற்று இருந்தால் அல்லது பிறருக்கு காட்டுவதற்காக அமைந்திருந்தால் அது அவர்களுக்கு மறுமையில் பெரும் கை சேதத்தை ஏற்படுத்தும் தமது தொழுகையில் கவனமற்று தொழுவோருக்குக் கேடுதான், அவர்கள் பிறருக்குக் காட்டு வதற்காகத் தொழுகின்றனர் திருக்குர்ஆன் 107:4,5,6. கவனக் குறைவாக தொழும் தொழுகையாளிகளைப் பார்த்து அவர்களுடைய தொழுகையால் அவர்களுக்குக் கேடு தான் என்று ஏகஇறைவன் தன் திருமறையில் கோபமாக ஏன் கூறுகின்றான்?
அல்லாஹ்வும், அல்லாஹ்வுடைய தூதரும் காட்டித் தராத வழியில் முன்னோர்கள் உருவாக்கித் தந்த வழியில் தொழுகையை அமைத்துக் கொள்வதும் இறைவனுக்கு செலுத்தும் வழிபாட்டில் அதிக கவனம் எடுத்துக் கொள்ளாமல் தொழுகைக்கான அழைப்பு விடுக்;கப் பட்;டப்பின்னரும் விரைந்து செல்லாமல் அலச்சியப் படுத்துவதும் தொழுகையின் வரிசையில் சோம்பலுடன் நிற்பதும், பிறர் பார்த்து இவர் பக்தியாளர் என்றுக் கூறுவதற்காக தனது தொழுகையை பிரத்தியேகமாக அமைத்துக் கொள்வது போன்ற தொழுகையை அல்லாஹ் ஏற்றுக் கொள்வதில்லை. அதனால் ஹஜ்ஜூக்கு முன்னால் பேணப்பட வேண்டிய தொழுகை மனிதரிடத்தில் முறையாக இல்லை என்றால் அதற்கு அடுத்ததாக வரக்கூடிய அனைத்து வழிப்பாடுகளும் செல்லத் தகாததாக ஆகிவிடும். தொழுகை என்ற வழிப்பாட்டை உலகில் வாழும் போது விட்டு விட்டு மறுஉலக விசாரணையின் போது ஹஜ் செய்திருக்கிறேன் அதனால் என்னை சொர்க்கத்தில் சேர்த்து விடு என்று எவரும் இறைவனிடம் கூறமுடியாது என்பதுடன் அதற்கு முன் முறையாகப் பேண வேண்டியத் தொழுகையை விட்டதற்காக''ஸக்கர்' என்று சொல்லக் கூடிய கொழுந்து விட்டு எரியும் நரகிற்குள் புக நேரிடும். ...குற்றவாளிகளிடம் உங்களை நரகத்தில் சேர்த்தது எது? என்று விசாரிப்பார்கள், நாங்கள் தொழுவோராகவும் ஏழைகளுக்கு உணவளிப்போராகவும் இருக்கவில்லை எனக்கூறுவார்கள், வீணில் மூழ்கியோருடன் மூழ்கிக் கிடந்தோம், தீர்ப்பு நாளை பொய்யெனக் கருதி வந்தோம், உறுதியான காரியம் (மரணம்) எங்களிடம் வரும் வரை (எனவும் கூறுவார்கள்). திருக்குர்ஆன் 70:41 முதல் 47 வரை. மேற்கானும் திருமறை வசனத்தில் நரகிற்குள் நுழையச் செய்ததற்கு எது காரணமாக இருந்தது என்று சொர்க்க வாசிகளால் நரகவாசிகளைப் பார்த்து கேட்கப்படும் பொழுது ஹஜ் செய்யவில்லை என்று எவரும் சொல்ல மாட்டார்கள் தொழ வில்லை, வறுமைக் கோட்டுக்குக் கீழ் துவண்டு வாடி வதங்கிய ஏழைகளுக்கு எங்களுடைய பொருளாதாரத்திலிருந்து சிலவற்றை எடுத்துக் கொடுத்து உதவ முன் வரவில்லை, மறுமையை மறந்து, உலகத்தை சொர்க்கபுரியாக்கி வாழ்ந்தவர்களைப் பார்த்து எங்களுடைய வாழ்க்கையையும் அமைத்துக் கொண்டோம், மரணம் தொண்டைக் குழியை அடையும் வரையில் சுகபோகத்தில் திளைத்தோம். என்றுக் கூறுவார்களாம். உமர் பின் கத்தாப்(ரலி) அவர்கள் கலீஃபாவாக பொறுப்பேற்றதும் தமது ஆளுகைக்குட்பட்ட மாகாணங்களின் ஆளுநர்கள் அனைவருக்கும் பின்வருமாறு கடிதம் எழுதினார்கள்: உங்களுடைய பணிகளில் என்னிடம் அனைத்தையும் விட அதிக முக்கியத்துவம் வாய்ந்தது தொழுகையே! யார் தன் தொழுகையைப் பேணுகின்றாரோ - அதனைக் கண்காணித்தவண்ணம் இருப்பாரோ அவர் தன் மார்க்கம் முழுவதையும் பேணி நடப்பார். எவர் தன் தொழுகையை வீணடித்து விடுகின்றாரோ அவர் மற்ற விஷயங்களைத் தாராளமாக வீணடிக்கக் கூடியவராகவே இருப்பார்.(மிஷ்காத்) உமருடைய நாவில் அல்லாஹ் பேசுகிறான் என்ற நற்சான்றிதழை பெருமானார்(ஸல்) அவர்கள் வழங்கினார்கள் அந்தளவுக்கு பெருமானார்(ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தில் உமர்(ரலி) அவர்கள் மார்க்க ஞானம் மிக்கவர்களாகவும், இறையச்சமுடையவர்களாகவும் திகழ்ந்தார்கள் இறையச்சமுடைய உமர்(ரலி) அவர்களுடைய ஆட்சி காலத்தில் குற்றங்கள் மிகவும் குறைந்து மக்கள் ஒழுக்க சீலர்களாக வாழ்ந்ததற்கு முக்கிய காரணம் அவர்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதும் முதலில் மக்களுக்கு இட்ட உத்தரவு தொழுகை பற்றியதாக இருந்ததுவே காரணம். ஹஜ்ஜூக்கு செல்ல விருக்கும் முஸ்லிம் சகோதரர்களே! ஹஜ்ஜூடைய வழிப்;பாட்டுக்கு முந்தைய முக்கியமான வழிப்பாடாகிய தொழுகையை முறைப்படி தொழுதீர்களா?அவ்வாறு முறைப் படுத்தி உள்ளச்சத்துடன் தொழுதிருக்க ல்லை என்றால் இப்பொழுது நீங்கள் ஹஜ்ஜூடைய மாதத்தில் இருக்கின்றீர்கள் இப்பொழுதே அல்லாஹ்வும், அல்லாஹ்வுடைய தூதரும் சொல்லிக் காட்டிய வழியில் தொழுகையை அமைத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். ஹஜ்ஜூடைய மாதங்கள் ஷவ்வால், துல்கஃதா, துல்ஹஜ் ஆகிய மூன்று மாதங்களாகும் இந்த மூன்று மாதங்களில் (ஹஜ்ஜூக்குத்) தேவையானவற்றை திரட்டிக் கொள்ளுங்கள் ! திரட்டிக் கொள்ள வேண்டியவற்றில் (இறை) அச்சமே மிகச் சிறந்தது அறிவுடையோரே! என்னை அஞ்சுங்கள். 2:197 என்று இறைவன் கூறுகிறான். ஹஜ்ஜூடைய மாதங்களில் இறையச்சத்தை திரட்டுங்கள் இறைவனை அஞ்சுங்கள் ஹாஜி என்ற பட்டத்தைப் பெறுவதற்கான எண்ணத்தில் ஹஜ்ஜூக்கு இறங்காதீர்கள் ஹஜ் உருவாவதற்கு காரணியாக இருந்த தியாகச் செம்மல்களின் வரலாற்றை படித்தீர்கள் என்றால் ஹாஜி என்ற பட்டம் குப்பைத் தொட்டியில் வீசி எறியப் போதுமானது என்ற முடிவுக்கு வருவீர்கள் இதுவே இறையச்சத்தை ஏற்படுத்தும். இனி ஹஜ்ஜூக்கு முந்தைய கடமையாகிய ஜகாத், (தான தருமம்) முறையாக அமைந்திருந்ததா ? என்று அல்லாஹ் நாடினால் எழுதுவோம்....
وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர். 3:104

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்து